கட்டுமான துறையின் வளர்ச்சிக்கு நம் கண்களே சாட்சி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

Published Date: August 19, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் தமுக்கம் மைதானத்தில் 'கட்டிட கண்காட்சி 2023' நேற்று துவங்கியது. கண்காட்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் கட்டிட பொறியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆக.20ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் 165 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், 'கண்காட்சி கட்டிட பொறியியல் துறை மற்றும் அது சார்ந்து செயல்படும் தொழில்களில் உள்ள நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றி பொது மக்களும், கட்டுமான துறை சார்ந்த வல்லுநர்களும் தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கட்டிட பொறியியல் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அதிகரிப்பதற்கு நம் கண்களே சாட்சியாக உள்ளது. நாம் சாலைகளில் செல்லும்போது அங்கு பார்க்கும் கட்டிடங்கள், எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதை காட்டும் அளவிற்கு கட்டுமான துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஏற்கனவே நிதி, கட்டுமானத்துறையின் அடிப்படைப் பொருட்களான மண், சிமெண்ட் ஆகியவற்றின் பற்றாக்குறை அதிகமாக உள்ள நம் மாநிலத்தில் குறைந்தபட்ச பொருளாதாரம் திறன் ஆகியவற்றுடன் பசுமை வீடுகள், பசுமை சார்ந்த கட்டிடங்களை கட்டிடவியல் துறையினர் உருவாக்க வேண்டும். இதை அரசே வரைமுறை படுத்த வேண்டும் என நினைக்காமல் கட்டிடவியல் துறையில் உள்ள பொறியாளர்கள் வல்லுநர்கள் தாமாக முன் வந்து செயல்படுத்தினால் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் என்றார் .

 

 

Media: Dinakaran